திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து நேற்று (மார்ச் 4) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வரும் பயணி ஒருவர், சட்ட விரோதமாக நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், விமான நிலையம் முழுவதும் பயணிகள் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர், தனது ஜீன்ஸ் பேண்டின் பின்பக்கம் முட்டிக்கு கீழ் பகுதியில் தங்கத்தை ஸ்ப்ரே செய்து கடத்தி எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, அந்த பயணியிடமிருந்து 390 கிராம் மதிப்புடைய தங்கத்தை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.24 லட்சத்து 96 ஆயிரம் ஆகும்.
மேலும், எந்த நோக்கத்திற்காக தங்கத்தை சட்ட விரோதமாக கடத்தி வந்தார், அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா அல்லது வேறு வழக்குகள் இவர் மீது உள்ளதா என பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? - அமைச்சர் பிடிஆர் அளித்த விளக்கம்