திருவண்ணாமலை: செங்குணம் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக மனு அளித்தும் அரசு சாலை அமைத்து தராததால், பொதுமக்களே தங்களுடைய சொந்த செலவு மற்றும் உழைப்பில் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் அரசு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போரூர் அருகே உள்ளது செங்குணம் கிராமம். இங்கு மாதா கோயில் பகுதியில் உள்ள குடியிருப்பில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில், சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆண்டாண்டு காலமாக தரமான சாலை இல்லாமல் அப்பகுதியில் மக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அது மட்டுமின்றி, கரடு முரடான பாதையில் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்று வர அவதிப்படுவதாகவும், முறையான சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக காத்திருந்து எந்த பலனும் இல்லாத காரணத்தால், அப்பகுதியில் வசிக்கும் மக்களே ஒன்றிணைந்து தங்களுடைய சொந்த செலவில் சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, சொந்த செலவில் மண் கொண்டு வந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்பணியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, மக்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யாத மாவட்ட நிர்வாகம், போளூர் வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதையும் படிங்க: மீன் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு.. நீலகிரியில் சோகம்!
மேலும், "கடந்த 2 வருடமாக சாலை அமைக்க கேட்டு வந்தோம். ஆனால், எந்த பலனும் இல்லாததால், தற்போது நாங்களே மண் சுமந்து வந்து சாலை அமைத்து வருகிறோம். சாலை அமைக்க முடியுமா? இல்லையா? என தெரிவித்து விடுங்கள், முடியாது என்றால் எதற்காக அதிகாரிகள்? சாலை அமைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம். அரசாலே முடியாது என்றால், நாங்கள் எப்படி அமைப்போம்?
அரசு செவி சாய்க்காத காரணத்தால், கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து சாலை அமைத்து வருகிறோம். ஆகையால், தமிழ்நாடு அரசு உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.