சென்னை: கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை தரப்பில் திருமண மோசடி புகார் கொடுக்கப்பட்டது. நீண்ட வருடங்களாக நடந்து வரும் இந்த வழக்கு தொடர்பாக 12 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வளசரவாக்கம் காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அளித்தனர். அதன்படி, இன்று (பிப்.27) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. சீமான் தரப்பிலிருந்து அவரது வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாதக வழக்கறிஞர் சங்கர், "நடிகை வழக்கில் சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. ஏற்கனவே இரண்டு முறை புகார்தாரர் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். இதே வழக்கிற்காக அழைப்பாணை வழங்கப்பட்டு இதே காவல் நிலையத்தில் சீமான் முன்னதாகவே மூன்று மணி நேரம் விளக்கம் அளித்துள்ளார்.
இது முழுக்க முழுக்க அரசியல் அழுத்தத்திற்காக அளிக்கப்பட்ட ஒரு சம்மன். இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த சம்மன் கொடுப்பதற்கு முன்பே பல வெளிமாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு சீமான் முடிவு செய்திருந்தார்.
இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு இடம் தேர்வு செய்த மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்கணும் - மத்திய அமைச்சர்!
அதன் காரணமாக இன்று நேரில் ஆஜராக முடியவில்லை. எனவே இந்த விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்துள்ளோம். எங்கள் கடிதத்தை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் மீண்டும் இதே போன்று வேறு தேதியிட்ட சம்மன் அனுப்புவோம் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக 12 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. ஆனால் ஊடகங்கள் இந்த செய்தியை திரித்து சீமான் குற்றம் செய்தது போலவே செய்திகளை வெளியிடுகிறார்கள்" என்று கூறினார்.