சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி வணிக வளாக கடைகளின் வாடகை கட்டணம் ஆண்டுதோறும் 15% அளவுக்கு உயர்த்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் வணிக வளாகங்களில் உள்ள கடைகளின் வாடகை ஆண்டுதோறும் 5% மட்டும் உயர்த்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற கூட்டமானது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. மாமன்ற கூட்டத்தில் 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொழில் உரிம கட்டணம்:சென்னை மந்தைவெளிப்பாக்கம் 5ஆவது குறுக்கு தெருவுக்கு நடிகர் எஸ்.வி.சேகரின் தந்தையின் பெயரான எஸ்.வி.வி.வெங்கட்ராமன் தெரு என்று பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
500 சதுர அடிக்குள் இயங்கும் மளிகை கடைகளுக்கு ரூ. 3500 வசூலிக்கப்பட்ட தொழில் உரிமக் கட்டணம் ரூ.1200 ஆக குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 500 சதுர அடிக்குள் இயங்கும் கடைகளுக்கு ரூ. 2300 ரூபாய் தொழில் உரிம கட்டணம் குறைகிறது.

501 சதுர அடி முதல் 1000 சதுர அடி கொண்ட வணிக கடைகளுக்கு ரூ. 3500, 1001 சதுர அடி முதல் 5000 சதுர அடி பரப்பளவு கொண்ட கடைகளுக்கு எவ்வித மாற்றமுமின்றி ரூ.7000, 5000 சதுர அடிக்கு மேல் கொண்ட கடைகளுக்கு ரூ. 10000 என தொழில் உரிமக் கட்டணம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5% மட்டும் உயர்த்தப்படும்: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 127 வணிக வளாகங்களில், 5914 கடைகள் உள்ளன. இவற்றின் வாயிலாக மாதத்திற்கு ரூ.180 கோடி வசூல் செய்யப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாக கட்டடங்களின் குத்தகை காலத்தை 12 வருடங்களாக அதிகரித்தும், மாத வாடகையை குறித்த நேரத்தில் செலுத்த தவறும் பட்சத்தில் 12% அபராதம் செலுத்தவும் மற்றும் ஒவ்வொரு வருடமும் 5% வாடகையை உயர்த்தவும் மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் வாடகை உயர்வு 15% ஆக இருந்த நிலையில், அதனை 5% ஆக குறைக்க மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா நகரில் பார்க்கிங் அனுமதி: வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்காக 19 இடங்களில் சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் 10 இடங்களில் வாகனம் நிறுத்தங்களை நிர்வாகம் எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் சென்னை அண்ணா நகர் பகுதிகளில் உள்ள முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சாலைகளில் பார்க்கிங் நிர்வாகத்தை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது.
தெருவுக்கு வெளியே ஏற்படுத்தப்பட உள்ள வாகன நிறுத்தங்களில் ஒரு மணி நேரத்திற்கு இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.10, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20 வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, ஒரு மணி நேரத்திற்கு மேல் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 40, இலகு ரக மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கு ரூ. 60 கட்டணம் வசூலித்துக் கொள்வதற்கு மாமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.