சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, சீமான் விட்டு காவலாளி மற்றும் சம்மனை கிழித்த பணியாளரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சீமான் காவலாளியிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அதற்கான உரிமம் சரியாக இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்த புகாரை நடிகை திரும்ப பெற்றாலும், அவர் மீது ஐ.பி.சி 376 பிரிவில் வழக்குப்பதிவு (பாலியல் வன்கொடுமை) செய்யப்பட்டதால், வழக்கை ரத்து செய்ய முடியாது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி காவல்துறையினர் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சம்மன் ஒட்டிய போலீசார்:
இந்த வழக்கு விசாரணைக்கு, சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று ஆஜராக வேண்டும் என்று போலீசார் கடந்த 24 ஆம் தேதி சம்மன் அளித்திருந்தனர். ஆனால், சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இதனால், மீண்டும் நாளை (பிப்ரவரி 28) காலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் முன்பு வளசரவாக்கம் போலீசார் நேரில் சென்று இரண்டாவது சம்மனை இன்று கதவில் ஒட்டியுள்ளனர்.
அந்த சம்மனில், “ நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாட்சியங்களை கலைக்ககூடாது. சாட்சியங்களை மிரட்டும் வகையில் நடக்கக்கூடாது. விசாரணை தேவைப்படும்போது நேரில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கு விரைவாக முடிய அனைத்து உண்மைகளையும் விசாரணையில் தெரிவிக்க வேண்டும்." என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீமான் வீட்டு பணியாளர் அந்த சம்மனை கிழித்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், சம்மனை கிழித்தது யார்? என விசாரணை நடத்த சீமான் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போது, போலீசாரை உள்ளே அனுமதிக்க மறுத்த சீமான் வீட்டு காவலாளி மறுத்ததாக தெரிகிறது. இதனால் போலீசாருக்கும், காவலாளிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கி பறிமுதல்:
இதையடுத்து, காவலாளியை 3 போலீசார் சேர்ந்து குண்டுக்கட்டாக காவலர் வாகனத்தில் ஏற்றி நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதில், காவலாளி துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. காவலாளியிடம் இருந்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்ய முயற்சித்த நிலையில், பாதுகாவலர் துப்பாக்கியை தர மறுத்ததால் போலீசார் அவரது கையில் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி அதனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சம்மனை கிழித்த பணியாளரையும் போலீசார் காவல் நிலையல் அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையில், சீமானின் மனைவி போலீசாரிடம் இதுகுறித்து கேட்டபோது அவரிடம் எந்த பதிலும் கூறாமல் போலீசார் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து அவரிகளிடம் போலீசார் விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி வந்தது எப்படி?
விசாரணையில், காவலாளி அமல்ராஜ் முன்னாள் ராணுவ வீரர் என்பதால் அவரின் கைகளில் கை துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, துப்பாக்கியை காட்டி காவல்துறையை மிரட்டியதாக காவலாளி அமல்ராஜ் மீதும், அரசு அதிகாரி ஒட்டிய விசாரணை அழைப்பாணையை கிழித்ததாக சீமான் வீட்டின் பணியாளர் சுபாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சம்மனை கிழிக்க சொன்னது யார்? என்பது குறித்து சுபாகரிடம் போலீசார் தொடர்ந்து விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.