ஈரோடு: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள புன்செய் புளியம்பட்டி டாணாபுதூர் சோதனைச் சாவடியில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனையிட்டபோது, காருக்குள் இருந்த பையில் ரூ.1.95 லட்சம் பணம் இருந்ததைக் கண்டுபிடித்த பறக்கும் படையினர், இது குறித்து காரில் வந்த வெங்கடாசலம் என்ற நபரிடம், இந்த பணம் எதற்காக கொண்டு செல்கிறீர்கள், எங்கு கொண்டு செல்கிறீர்கள் என கேட்டபோது, அவர் காரைக்குடியில் இருந்து கோவைக்குச் செல்வதாகவும், கோவையில் வீட்டு மனை இடம் வாங்குவதற்காக பணம் கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பணம் கொண்டு செல்வதற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில், உதவி தேர்தல் அலுவலர் உமாசங்கரிடம் பணத்தை ஒப்படைத்துள்ளனர். காரில் கொண்டு செல்லப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணம் சமர்ப்பிக்கப்பட்ட பின் பணம் ஒப்படைக்கப்படும் எனவும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தவெக-வின் ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைப்பு..காரணம் என்ன?