மதுரை: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தது. இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கடந்த மார்ச் 19-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, "பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி எடுத்து உணவகத்தில் குண்டு வைத்ததாகவும்" கூறியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் இந்த கருத்து, பெரும் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது 'X' வலைத்தளப் பக்கத்தில், மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சூழலில், மதுரை மாவட்டம் கடச்சனேந்தலைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர், சைபர் கிரைம் காவல்துறையில், ஷோபாவின் கருத்து குறித்து புகார் அளித்துள்ளார். அதில், "மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் இந்த அறிக்கை கர்நாடக மற்றும் தமிழக மக்களிடையே வெறுப்புணர்வுகளை வளர்க்க முயற்சிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு மக்களை தீவிரவாதிகள் என பொதுமைப்படுத்தி, தமிழர்கள் மற்றும் கன்னடம் பேசும் மக்கள் என இரு சமூகத்தினரிடையே பகைமையை உருவாக்க முயல்கிறது.
அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் வெறுப்புணர்வை தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் சாத்தியம் உள்ளது. மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் கருத்து இருபிரிவினருக்கிடையே உள்ள நல்ல உறவைக் கெடுத்துள்ளது. இது சட்ட ஒழுங்கு நிலைமையை சீர்குலைத்துள்ளது. ஆகவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தியாகராஜன் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில், மதுரை சைபர் கிரைம் போலீசார், மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது இந்திய தண்டனைச் சட்டம் 153, 153(A), 505(1)(b), 505(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, ஷோபா கரந்த்லாஜே தனது 'X' வலைதளப் பக்கத்தில், "என் தமிழ் சகோதர சகோதரிகளே, நான் பேசியதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆயினும், எனது கருத்துக்கள் சிலருக்கு வலியை ஏற்படுத்தியதை நான் காண்கிறேன். அதற்காக, நான் மன்னிப்பு கோருகிறேன்.
எனது கருத்துக்கள் கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்றவர்களை நோக்கி மட்டுமே கூறப்பட்டது. ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தொடர்பாக நான் கூறிய கருத்தின் மூலம் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, என் இதயத்தின் ஆழத்தில் இருந்து நான் மன்னிப்பு கேட்கிறேன். மேலும், எனது கருத்துக்களை திரும்பப் பெறுகிறேன்" என்று பதிவிட்டு, தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தருமபுரி சிட்டிங் எம்பி செந்தில்குமாருக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்?