சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) கிளையில் பணியாற்றி வந்தவர், அதே வங்கியில் கடன் வாங்குவதற்காக அடமானமாக வைத்த விற்பனை பத்திரத்தை வங்கி தொலைத்துள்ளது. அதற்காக வாடிக்கையாளருக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் பணியாற்றி வந்தவர் தனசேகரன். இவர் அதே வங்கியில் விற்பனை பத்திரத்தை அடமானமாக வைத்து கடன் பெற்றுள்ளார். தற்போது, அவர் பணியில் இருந்து ஓய்வுப் பெற இருந்த நிலையில், அந்த கடனை கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழுமையாக செலுத்தியுள்ளார்.
இதனை அடுத்து தனது அசல் விற்பனை பத்திரத்தை வழங்கக் கோரி தனசேகரன் வங்கியிடம் முறையிட்டுள்ளார். ஆனால், பத்திரம் தொலைந்து போனதாக கூறிய வங்கி நிர்வாகம், நகல் பத்திரம் பெற உதவுவதாகக் கூறியதுடன் அவருக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து தனசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு நேற்று (பிப்ரவரி 26) புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வீரராகவன், லோன் திரும்ப செலுத்தப்பட்ட பின்னர் உடனடியாக பத்திரத்தை வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமெனக் கூறினார்.
இதையும் படிங்க: சிவகங்கை செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!
இதையும் படிங்க: ரூ.5000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள்! முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
மேலும், வாங்கிய கடனுக்கு ரிசர்வ் வங்கி விதிப்படி வட்டி வசூலிக்கும், எனவே இந்த விவகாரத்திலும் ரிசர்வ் வங்கி விதிப்படி செயல்பட வேண்டுமெனவும் வாதிட்டார். இதையடுத்து, வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இழப்பீடு குறித்து உயர் நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. அதற்கு சிவில் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றார்.
இதனையடுத்து, ரிசர்வ் வங்கி விதிகள் தெளிவாக உள்ள நிலையில் இழப்பீடு தொடர்பாக மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை நாட வேண்டியதில்லை எனக் கூறிய நீதிபதி, மனுதாரருக்கு இழப்பீடாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.