நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதில் இரவு காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது சோலூர் மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது சோலூர் மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிவையில், அவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர். தொடக்கத்தில் இந்த வழக்கை சோலூர் மட்டம் போலீசார் விசாரித்த நிலையில் பின்னர் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அப்போது தனிப்படை போலீசார் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு, கொடநாடு கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தற்கொலை வழக்கு, சேலம் அருகே கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகளை தனித்தனியாக விசாரித்தனர். அதில் கொலை, கொள்ளை சம்பவத்தில் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர்களையும் தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையானது ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் என தொடர்ந்து சம்மன் அளித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 245 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அதிமுக பிரமுகர் சங்கர் என்பவர் கொடநாடு பகுதிக்கு அருகில் வசிப்பவர் என்றும் அடிக்கடி கொடநாடு பங்களாவுக்கு சென்று வந்தவர் என்றும் கூறப்படும் நிலையில் அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சங்கர் இன்று (பிப்ரவரி 27) சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்காக ஆஜரானார். ஆஜராக வந்த அவர் அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு; தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
மேலும், கனகராஜ் விபத்தில் உயிரிழந்த வழக்கை விசாரித்த சேலம் தனிப்படையில் இருந்த வேலுசாமி, விஜயகுமார், மகேஸ்வரன் ஆகிய 3 போலீசாருக்கு கோவையில் உள்ள சிபிசிஐடி விசாரணை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 25) மகேஸ்வரன் மட்டும் ஆஜராகி இருந்தார். மேலும் இன்றைய தினம் எஸ்டேட் மேனேஜர் நடராஜனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று ஆஜராகவில்லை.