சென்னை: தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அந்த மாவட்டங்களில் நெல்லை பாதுகாப்பாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
டெல்டா மாவட்டங்களில் அடுத்த ஓரிரு தினங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சேதம் அடையாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
2024-25 ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் டெல்டா மாவட்டங்களில் இருந்து இதுவரை 16,94,796 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொள்முதலை விடவும் இந்த ஆண்டு கூடுதலாக 3,10,288 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு 200 கொள்முதல் நிலையங்கள் கூடுதலாகத் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கி இருக்கிறது தெரியுமா...? பிற மாநில மக்களை எச்சரிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
விவசாயிகளிடம் இருந்து தாமதம் இன்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஆண்டு 2088 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்த கொள்முதல் நிலையங்களில் ஆறாயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த சூழலில் பிப்ரவரி 28, மார்ச் 1 ஆகிய நாட்களில் டெல்டா மாவட்டங்களை கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் மழையால் நெல் பாதிக்கப்படாமல் கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி, தலைமை செயலாளர் முருகானந்தம், டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.