சென்னை : சென்னை, வானகரம் அருகே கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி மதுரவாயல் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில், போலீசார் அந்த பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு பைக்கில் ஒருவரும், 4 பேர் நடந்தும் வந்தனர். பின்னர் 5 பேரும் அருகில் இருந்த புதருக்குள் இருந்த ஒரு சாக்கு மூட்டையை எடுத்து வந்தனர். இதையடுத்து, கண்காணிப்பில் இருந்த போலீசார் அவர்களை பிடிக்கச் சென்ற போது பைக்கில் வந்தவர் பைக்கின் முன்பகுதியில் மூட்டையை வைத்து தப்பிக்க முயன்றபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.
உடனடியாக அவரை போலீசார் பிடித்து மூட்டையைக் கைப்பற்றினர். மற்ற 4 பேரான கில்லி அருண், கோலி பாபு, பூங்காவனம், வெள்ளை மணி ஆகியோர் அங்கிருந்து ஆளுக்கு ஒரு புறமாக ஓடி தப்பி விட்டனர். இதையடுத்து, மூட்டையை சோதனை செய்ததில், 21 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க : சித்தூரில் உதயமாகிறது வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் புதிய கிளை
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பைக்கில் எடுத்து தப்ப முயன்ற பிரபா (எ) தக்காளி பிரபாகரனை கைது செய்தனர். பின்னர், மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜராகி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் பிரபாகரனுக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.2.4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற 4 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்