சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள கழிவறைகளின் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 372 இடங்களில் உள்ள 3720 கழிவறைகளை தூய்மைப்படுத்தி பராமரிக்கும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தத்திற்கு விட முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ராயபுரத்தில் 2159 கழிவறைகள், திரு.வி.க நகரில் 958 கழிவறைகளை தூய்மை செய்து பராமரிக்கும் பணி தனியார் நிறுவனத்திற்கு ரூ.430 கோடி ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அதிமுக மாமன்ற குழு தலைவர் கே.பி.கே.சதீஷ்குமார், ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசுகையில், "ராயபுரம், திரு விக நகரில் உள்ள கழிவறைகளை பராமரிக்கும் பணியை ஏற்கெனவே செய்துவரும் RSB INFRA என்ற தனியார் நிறுவனத்திற்கு, சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள கழிவறைகளை தூய்மைப்படுத்தி பராமரிக்கும் ஒப்பந்தம் ரூ.1167 கோடிக்கு ஒதுக்கியுள்ளார்கள். முன்பு வழங்கப்பட்ட பணியே சரி வர செய்யாமல் இருக்கும் நிறுவனத்திற்கு மீண்டும் ரூ.1167 கோடிக்கு ஒப்பந்தத்தை நீட்டித்து இருக்கிறார்கள்.
மக்கள் வரி பணத்தில் தான் சென்னை மாநகராட்சி இயங்கி வருகிறது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாநகராட்சி ஒரு கழிவறை இருக்கைக்கு பராமரிப்பு செலவாக 3.18 ரூபாய் இருந்தது. ஆனால் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அது ரூ.363 (115% உயர்வு) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது சென்னை மாநகராட்சி மக்களுக்காக செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாநகராட்சியில் மக்கள் பிரச்சனைக்கான எந்த தீர்வும் கிடைப்பதாக தெரியவில்லை. அதே போல் மாநகராட்சி அதிகாரிகளிடம் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கான முறையான பதில் வருவதில்லை. மாமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் தான் தினமும் மக்களை சந்திக்கின்றோம். இதுபோன்று அதிகாரிகள் அலட்சியமாக பதில் சொல்வதால் மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய நிலையில் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
பெரிய வர்த்தக மையங்கள் மற்றும் பெரிய நிறுவனங்கிளில் உள்ள ஒரு கழிவறைக்கு 150 ரூபாய்க்கு மேல் யாரும் செலவு செய்வதில்லை. ஆனால் சென்னை மாநகராட்சியில் ஒரு கழிவறை இருக்கைக்கு 363 ரூபாய் செலவு செய்வதற்கான காரணம் என்ன? அவ்வளவு செலவு செய்தும் கழிவறைகள் சுகாதாரமாகவும் சுத்தமாகவும் இருப்பதில்லை.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து கடற்கரைகளை தூய்மைப் பணிகளையும் தனியாருக்கு ஒப்பந்தத்தில் விடுவதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. எந்த ஒப்பந்ததாரருக்கு கொடுத்தால் பணம் கிடைக்கும்? அதில் எவ்வளவு ஊழல் செய்யலாம்? என சென்னை மாநகராட்சியும் திமுகவும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன.
இவ்வாறு அதிமுக மாமன்ற குழு தலைவர் கே.பி.கே.சதீஷ்குமார் தெரிவித்தார்.