By சி. உசேன்
சென்னை: பரப்பரப்பாக காணப்படும் சென்னையில் இப்படி ஒரு இடமா? என்று கூறும் அளவிற்கு சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக வில்லிவாக்கம் ஏரி மாற உள்ளது.
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் 39 ஏக்கரில் ஏரி அமைந்துள்ளது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஏரியை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ரூ. 16 கோடி செலவில் பசுமை பூங்கா அமைக்கும் பணியை துவக்கியது. பின்னர் திட்ட மதிப்பீடு ரூ. 45 கோடி அளவிற்கு உயர்த்தப்பட்டு ஏரி தூர் வாரப்பட்டு, கரைகளை பலப்படுத்தி சீரமைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் திறக்கப்பட உள்ளது.
பொழுதுபோக்கு அம்சங்கள்
அந்த வகையில், வில்லிவாக்கம் ஏரியில் பூங்காக்கள், நடைபயிற்சி பாதைகள், உடற்பயிற்சி கூடங்கள், உணவு கூடம், படகு சவாரி, ஸ்கேட்டிங், ஆவின் பாலகம், இசை நீரூற்று, குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள், 12D திரையரங்குகள், ஸ்னோ வோர்ல்டு மற்றும் பார்க்கிங் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் வில்லிவாக்கம் ஏரி சீரமைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஏரியின் அடையாளமாக அதன் நடுவே கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 750 மீட்டர் நீளமும், 3 அடி அகலத்துடன் ரூ. 8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
ஏரிக்கு நடுவே கண்ணாடி தொங்கு பாலம் கட்டப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு இதன் மீது நடந்து செல்லும் பயணம் சிறந்த அனுபவமாக இருக்கும். குறிப்பாக சிறுவர்களுக்கு இந்த பாலத்தில் நடந்து செல்லும்போது த்ரில் அனுபவத்தை தரும். தண்ணீரில் நடக்க முடியாத குறையை இந்த கண்ணாடி தொங்கு பாலம் ஓரளவிற்கு தீர்க்கும் என்பதில் வியப்பில்லை.

கண்ணாடி தொங்கு பாலத்தின் சிறப்பம்சங்கள்
பாலத்தில் இருந்து தவறி யாரும் கீழே விழாத வகையில் மக்களின் பாதுகாப்பு கருதி, பாலத்தின் இருபுறமும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரே நேரத்தில் 50 பேர் மட்டும் கண்ணாடி பாலத்தில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மிகவும் ரம்மியமாக, அழகாக வடிவமைக்கப்பட்டு வரும் வில்லிவாக்கம் ஏரி பூங்கா கோடை விடுமுறையில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கண்ணாடி தொங்கு பாலம், படகு சவாரி, ஸ்னோ வோர்ல்டு என கோடைக்கால விடுமுறையில் குழந்தைகளை அழைத்து செல்லும் சிறந்த பொழுதுபோக்கு இடமாக வில்லிவாக்கம் ஏரி பூங்கா அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி தொங்கு பாலமும், பூங்காங்களும் அமைவது குறித்து ஆட்டோ ஓட்டுநர் ஜெயக்குமாரிடம் கேட்கையில், '' வில்லிவாக்கம் ஏரி பூங்கா திறக்கப்பட்டால் எங்களுக்கு சவாரி அதிகமாக கிடைக்கும். சென்னையில் வில்லிவாக்கம் ஏரி பூங்கா தான் மிகப்பெரிய பூங்காவாக இருக்கும். குறிப்பாக கண்ணாடி பாலம், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் உள்ளிட்டவையுடன் திறக்கப்பட உள்ளது. விரைவாக பூங்காவை திறக்க வேண்டும்'' என்றார்.

வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் கூறுகையில், "வில்லிவாக்கம் பகுதியில் தான் பிறந்து வளர்ந்தேன். வெறும் ஏரியாக இருந்துவரும் இந்த ஏரியில் கண்ணாடி தொங்கும் பாலத்துடன்கூடிய பூங்கா அமைக்கப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. அத்துடன், குழந்தைகளுடன் பொழுதை கழிக்க பல்வேறு விளையாட்டுகளும் வர உள்ளன. வெளிநாட்டுடன் ஒப்பிடும் வகையில் சென்னை வில்லிவாக்கம் ஏரி பூங்கா அமையும் என எதிர்பார்க்கிறேன். இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்'' என்றார்.