வேலூர்: கே.வி.குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் பகுதியில் பொது இடத்தில் இருந்த காளியம்மன் கோயில் சாதிய காரணங்களுக்காக இடிக்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேவரிஷிகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் பொது சொத்து சேதம் பிரிவிலும், நவீன் குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்சி/எஸ்டி பிரிவு (SC/ST ACT), பொது சொத்து சேதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லோகநாதன் மீது கே.வி.குப்பம் காவல் துறையினர் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, காளியம்மன் கோயிலுக்கு பட்டியல் சமூகத்தினர் வரக்கூடாது என கூறி மாற்று சமுகத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு கோயிலை இடித்துள்ளார். இந்தப் பகுதியில் உள்ள மக்கள்தொகையில் சுமார் 50 சதவீதத்தினர் தலித்துகள் என்பது குறிப்பிடத்தக்கது. கோயில் இடிப்பு பிரச்சினை தொடர்பாக வருவாய்த்துறை தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் இந்த விவகாரம் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், குடியாத்தம் வருவாய்த்துறை அதிகாரிகள், இரு சமூகத்தினரிடமும் சமாதானக் குழு கூட்டம் நடத்த திட்டமிட்டு, அதன் அடிப்படையில் சமாதான கூட்டமும் நடத்தினர். அதில் காளியம்மன் கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிலையை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 21ஆம் தேதி பகல் 12 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும், அந்த சிலையை 22ஆம் தேதி அறநிலையத்துறை சார்பில் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், எடுத்துச்செல்லப்பட்ட கோயிலின் முன்பக்க இரும்பு கதவினையும் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், கோயிலில் வழிபாடு நடத்த ஏதுவாக கிராம நிர்வாக அலுவலரை அணுகி சாவியை பெற்றுக்கொண்டு வழிபாடு முடிந்த பிறகு, மீண்டும் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. காளியம்மன் கோயிலில் சாதாரண வழிபாடு தவிர்த்து மற்ற அனைத்தையும் நிர்வகிக்க குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த குழுவில் கே.வி.குப்பம் மண்டல துணை வட்டாட்சியர், கே.வி.குப்பம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், காட்பாடி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர், தேவரிஷிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், கே.வி.குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், தேவரிஷிகுப்பம் கிராம நிர்வாக அலுவலர், தேவரிஷிகுப்பம் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட 7 பேர் இடம் பெறுவார்கள். இந்த குழுவினர் கோயில் தொடர்பான முடிவுகள் எடுத்து கே.வி.குப்பம் வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்வார்கள்.
அதன்படி விழாக்கள் நடத்துவது தொடர்பாக வட்டாட்சியர் இறுதி முடிவெடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. கோயில் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை இருப்பதால் காவல் துறையினர் பாதுகாப்பு கருதி சுழற்சி முறையில் அடுத்த 10 நாட்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த பிரச்சினையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் மீது காவல் துறையினர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: புரட்டாசியை எதிர்நோக்கும் சேலம் சென்றாயப்பெருமாள் கோயில்; அறநிலையத்துறைக்கு பறந்த உத்தரவு! - Salem Sendraya Perumal Temple