சென்னை: கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், ஞானசேகரன் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஞானசேகரன் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஞானசேகரனின் தாய் கங்காதேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தனது மகன் ஞானசேகரனை கடந்த டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் காவல்துறையினர் கைது செய்ததாகவும், அதன் பிறகு ஜனவரி 5-ஆம் தேதி தனது மகன் ஞானசேகரன் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
தனது மகன் மீதான பாலியல் வழக்கு 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ள நேரத்தில், இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பழைய வழக்குகளை காரணம் காட்டி காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்துள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கக்கூடிய எந்த விதிமுறைகளையும் மாநகர காவல் துறையினர் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக தனது மகன் மீது வேண்டும் என்றே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளது.
இதையும் படிங்க: போலி பேராசிரியர்கள் நியமனம் விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முக்கிய முடிவு! |
எனவே, சட்ட விரோத காவலில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுவிப்பதுடன், தனது மகன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து நான்கு வாரங்களில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
தமிழ்நாட்டை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றன. இந்த நிலையில் அவரது தாய், தன் மகனை விடுதலை செய்யும்படியும், போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டியும் மனு தாக்கல் செய்துள்ளது கவனிக்கத்தக்கது.