திருச்சி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்னும் 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கிட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த உடையாபட்டியைச் சேர்ந்த சுப்பாயி என்பவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காளை ஒன்றை வாங்கி அதை செவலூர் முனியப்பன் கோவிலுக்கு நேர்ந்து விட்டார். அந்த காளையை வாடிவாசல்களில் கோவில் பெயரிலேயே அவிழ்த்து விடப்பட்டு வந்தது.
அந்த காளை ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை பந்தாடி, தனக்கென தனி முத்திரை பதித்தும் வந்தது. இந்த நிலையில், அந்த காளை இன்று காலை ஏலம் விட்டப்பட்டது.
இதையும் படிங்க: சாம்சங் தொழிலாளர்கள் கைது விவகாரம்; அவசர வழக்காக விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம்!
சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பலரும் ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில், ஆயிரம் ரூபாயில் ஏலம் தொடங்கிய நிலையில் போட்டி போட்டு ஏலம் கேட்டனர்.
இறுதியில் ஏலம் 90 ஆயிரம் ரூபாயில் முடிவு பெற்றது. கல்கொத்தனூரைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்ற வாலிபர் காளையை வாங்கினார். இதையடுத்து, சிறப்பு வழிபாடுகளுக்கு பின் காளையை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். மேலும், இந்த காளையை ஏலம் விட்டு கிடைத்த தொகையை, அந்த பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கிட முடிவு செய்துள்ளனர்.