நவி மும்பை: ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி இலங்கையை வீழ்த்திய நிலையில், இரண்டாவது போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
இதனைத்தொடர்ந்து நேற்று (பிப்.26) காலிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும், சங்ககரா தலைமையிலான இலங்கை அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா பவுலிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வான் விக், ஹஷீம் ஆம்லா ஆகியோர் நன்றாக விளையாடினர். முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் சேர்த்த நிலையில், வான் விக் அவுட்டானார். 3வது வீரராக களமிறங்கிய பீட்டர்சன் 6 ரன்களுக்கு அவுட்டானார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் காலீஸ் அதிரடியாக விளையாடி 24 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய ருடால்ஃப் 9, டேன் விலாஸ் 28, ஃபிலாண்டர் 5 ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். அதே நேரத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆம்லா 76 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு உபூல் தரங்கா, சங்ககரா ஆகியோர் நிலையான தொடக்கத்தை வழங்கினர்.
இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்; அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு!
முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், சங்ககரா 16 ரன்களுக்கும், உபூல் தரங்கா 29 ரன்களுக்கும் அவுட்டாகினர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய திரிமாணே 13 ரன்களுக்கு ரன் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய குணரத்னே, ஜெயசிங்கே ஆகியோர் நிலைத்து நின்று அதிரடியாக ஆடினர். தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் பந்துவீச்சை பவுண்டரி, சிக்சர்களாக சிதறடித்தனர். இலங்கை அணி 17 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குணரத்னே 59 ரன்களும், ஜெயசிங்கே 51 ரன்களும் அவுட்டாகாமல் இருந்தனர்.