ஹைதராபாத்: உலகின் மிகப்பெரிய ஆன்மீக திருவிழாவான மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. மகா கும்பமேளாவின் இறுதி நாளான நேற்று 'ஹர ஹர மகாதேவா' முழக்கங்களை எழுப்பி, நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
உத்தரப்பிரதேச அரசு வெளியிட்ட தகவல்களின்படி, நேற்று (பிப்ரவரி 26) மகாசிவராத்திரி புதன்கிழமை மட்டும் அதிகாலை 2 மணி நிலவரப்படி, 11.66 லட்சம் பக்தர்கள் சங்கமத்தில் நீராடினர். இந்த எண்ணிக்கை அடுத்த இரண்டு மணிநேரத்தில் 25.64 லட்சமாகவும், காலை 6 மணிக்கு 41.11 லட்சமாகவும் உயர்ந்தது. மேலும், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமத்தில் காலை 10 மணியளவில் 81.09 லட்சம் பேர் இறுதி நாள் நிகழ்வில் பங்கேற்றனர். முன்னதாக, மகாசிவராத்திரி நாளில் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் வண்ண மலர்கள் தூவப்பட்டது.

மகா கும்பமேளா “மகா யாகம்”:
இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்தனார் தனது எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டார். அதில், “மனிதக்குலத்தின் 'மகா யாகம்', நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் சமத்துவத்தின் மாபெரும் திருவிழா, மகா கும்பம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்த சிறப்புக் காலம் இந்த ஆண்டு பெரு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதற்குப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது முதல் நன்றி.
ஜனவரி 13-ஆம் தேதி, பவுஷ் பூர்ணிமா நிகழ்வோடு தொடங்கி இந்த மகா கும்பா பிப்ரவரி 26ஆம் தேதியோடு நிறைவு பெற்றது. மொத்தம் 45 நாட்கள் நடைபெற்றுள்ள நிலையில் இதுவரை 66 கோடியே 21 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் புனித திரிவேணியில் புனித நீராடியுள்ளனர். இது உலக வரலாற்றில் என்றும் மறக்க முடியாத நிகழ்வாக மாறியுள்ளது.

வணக்கத்திற்குரிய அகாராக்கள், துறவிகள், மகாமண்டலேசுவரர்கள் மற்றும் மத குருக்களின் புனித ஆசீர்வாதத்தின் விளைவாக, இந்த நல்லிணக்கத்தின் மாபெரும் கூட்டம் தெய்வீகமாகவும், பிரமாண்டமும் நிறைந்துள்ளது.
இதையும் படிங்க: ஒடிசாவில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி.. அரசு பள்ளி விடுதியில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
இதற்கு உறுதுணையாக இருந்த மகா கும்பமேளா நிர்வாகம், உள்ளூர் நிர்வாகம், காவல்துறை, துப்புரவுப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மத அமைப்புகள், மத்திய மற்றும் உத்தரப்பிரதேச அரசுகளின் அனைத்துத் துறைகளுக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.
நெரிசல்களும், உயிரிழப்புகளும்:
கடந்த மாதம் மௌனி அமாவாசையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் காயமடைந்தனர் என்று அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த மாதம் டெல்லியில் உள்ள பிரதான ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் செல்லும் ரயில்களைப் பிடிக்க மக்கள் கூட்டம் அலைமோதியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.