சென்னை: இந்திய சினிமாவின் பழம்பெரும் பாடகரான கே.ஜே.யேசுதாஸ், மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, அரபு, ரஷ்யன், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அறுபது ஆண்டுகளாக இசைத்துறையில் கோலோச்சி வரும் யேசுதாஸ், எட்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் மாநில அரசு விருதுகள் உட்பட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் 1975இல் பத்மஸ்ரீ, 2002இல் பத்ம பூஷண் மற்றும் 2017 இல் பிரபு விபூஷண் விருதுகள் யேசுதாஸிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 85 வயதான யேசுதாஸ் வயது முதிர்வின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு ரத்த வெள்ளையணுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும், பரிசோதனைக்குப் பின் வீடு திரும்புவார் என்று ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்த தகவலை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய், சூர்யா இப்போது ரஜினி... ’கூலி’ திரைப்படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே!
ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் பேசியதில், ”இந்த செய்திகள் பற்றி தான் அறியவில்லை என்றும் தந்தை யேசுதாஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை" என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, யேசுதாஸ் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 10 ஆம் தேதி தான் யேசுதாஸ் 85வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த வயதிலும் இசை கச்சேரிகளிலும்ல, படங்களில் பாடி வருகிறார். கடைசியாக நவம்பர் 2024-ல், அவர் சர்வேசா என்ற கிறிஸ்தவ பிரார்த்தனை நிகழ்ச்சியில் பாடல் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.