சென்னை: தெலுங்கு திரையுலகின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் மற்றும் நாகர்ஜுனா இணைந்து நடிக்கும் நடிக்கும் திரைப்படம் ‘குபேரா’. மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக இருக்கும் இதன் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தில் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் குபேரா திரைப்படமானது ஜுன் 20ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 'குபேரா' படத்தின் உலகத்தை காட்சிப்படுத்தும் வகையிலான காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. ஒரு நிமிடத்திற்கும் குறைவான அந்த காணொளி இப்படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியது.
Kubera ❤️ pic.twitter.com/KwyUIyU2dB
— Dhanush (@dhanushkraja) February 27, 2025
பிச்சைக்காரர் போன்ற தோற்றத்தில் தனுஷ், பணக்காரராக நாகர்ஜுன் என மிகவும் எதிரெதிர் துருவங்களில் இருக்கக்கூடிய உலகத்தை காட்சிப்படுத்தியிருந்தனர். பொருளாதார ரீதியாக மூன்று வெவ்வேறு உலகங்களை உடைய கதாபாத்திரங்களுக்கிடையே நடைபெறும் கதையாக குபேரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பணம் சார்ந்த உரையாடல் வலுவாக கதையில் இருக்கலாம். இப்போது வெளியாகியுள்ள போஸ்டரிலும் அதனை காண முடிகிறது. அதனால் தான் படத்திற்கு குபேரா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் தலைப்புக்குத் சிக்கல் வந்துள்ளது. கரிமகொண்டா நரேந்தர் என்ற தெலுங்குப் படத் தயாரிப்பாளர், அங்குள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் குபேரா என்ற இதே தலைப்பை கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவு செய்துள்ளார். அவர் படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் அதே தலைப்பை சேகர் கம்முலா அவர் படத்துக்குப் பயன்படுத்தியுள்ளதால் அவர் தலைப்பை மாற்ற வேண்டும், இல்லை என்றால் தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு சுமூகமாக முடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் குபேரா ஆங்கில தலைப்பின் முடிவில் ஒரு A பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது போஸ்டர் இரண்டு AA பயன்படுத்தப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு ஆரம்பமே தனுஷுற்கு நன்றாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'சுழல் சீசன் 2', அஜித்தின் 'விடாமுயற்சி'... இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன?
தனுஷ் இயக்கத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது. அதன்பின் தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படமும் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்தில் குபேரா திரைப்படம் ஜுன் 20ஆம் தேதி வெளியாகிறது. இது மட்டுமல்லாமல் ஹிந்தியில் அவர் நடித்து வரும் ராஞ்சனாவின் இரண்டாம் பாகமான தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishk Mein) திரைப்படம் நவம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் வரிசையாக பட வெளியீட்டை வைத்திருக்கும் முன்னணி கதாநாயகன் பட்டியலில் தனுஷ் முதலில் இருக்கிறார்.