தெலங்கானா: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டம் (சி.பி.எஸ்.இ), ஐ.சி.எஸ்.இ, சர்வதேச இளங்கலை பாடத்திட்டம் (ஐ.பி) ஆகியவற்றைப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் உள்பட, மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை ‘தெலுங்கு’ மொழிப் பாடம் கட்டாயம் என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. 2025-26 கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசு மாவட்டம், மண்டலப் பள்ளிகள், அரசின் உதவி பெறும் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி உள்பட பிற வாரியத்துடன் இணைக்கப்பட்ட பள்ளிகளில் தெலுங்கு கற்பிப்பதை கட்டாயமாக்குவதற்காக, தெலங்கானா (பள்ளிகளில் தெலுங்கு கட்டாய கற்பித்தல் மற்றும் கற்றல்) சட்டத்தை, 2018-ஆம் ஆண்டில் மாநில அரசு கொண்டு வந்தது.
ஆனால், பல காரணங்களை மேற்கோள்காட்டி, கடந்த கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி, இந்த திட்டத்தை சரிவர நடைமுறைப்படுத்தவில்லை. தற்போதைய காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நிர்வாகத்துடன் ஒரு கூட்டத்தை நடத்தி, வரும் கல்வியாண்டு முதல் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "இந்தி என்ற முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம்" - திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! |
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, 'எளிய தெலுங்கு' பாடப்புத்தகமான 'வெண்ணெலா'-வை (Vennela) தேர்வுகளை நடத்துவதற்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இது சி.பி.எஸ்.இ உள்பட பிற வாரியங்களின் 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எளிதாக்கும் என்று தெரிவித்தார்.
'எளிய தெலுங்கு' பாடப்புத்தகம் தெலுங்கு தாய்மொழியாக இல்லாத மாணவர்களுக்கும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Telangana Government ordered to implement Telugu as a compulsory subject in CBSE, ICSE, IB, and other Board-affiliated schools in Telangana.
— Sanghamitra Bandyopadhyay (@SanghamitraLIVE) February 26, 2025
When will @MamataOfficial di do it in Bengal? pic.twitter.com/aD5ElHT1X9
நாம் எப்போது?
தெலங்கானா மாநில முதலமைச்சரின் இந்த அறிவிப்பை நாட்டு மக்கள் பாராட்டி வருகின்றனர். தாய்மொழியை நேசிக்கும் பிற மாநில மக்கள் தங்கள் ஆதரவு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சங்கமித்ரா பந்த்யோபத்யே (Sanghamitra Bandyopadhyay / @SanghamitraLIVE) எனும் பெயருடைய எக்ஸ் பயனர், தெலங்கானா மாநிலத்தில் பள்ளிகளில் ‘தெலுங்கு’ பாடம் கட்டாயம் என்ற அறிவிப்பின் நகலைப் பகிர்ந்துள்ளார். மேலும், தெலங்கானா அரசு இதை செய்துவிட்டது; நம் மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இதே போன்ற உத்தரவைப் பிறப்பிப்பாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.