டெல்லி : மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையே நாட்டின் முதல் தண்ணீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
ஜோகா - எஸ்பிளனேட் லைன் இடையே கவி சுபாஷ் - ஹேமந்த முகோபாத்யாய் மற்றும் தரதலா - மஜர்ஹட் மெட்ரோ சேவைகளையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், மாநில பாஜக எம்எல்ஏவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில், மெட்ரோ ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மேலும் 15 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களோடு சேர்ந்து மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். அப்போது, மாணவர்களோடு பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
ஹூக்ளி நதியின் நீர் மட்டத்தில் இருந்து 16 மீட்டர் ஆழத்தில் 520 மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையேயான 4.8 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் பாதைக்கு மட்டும் 4 ஆயிரத்து 965 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையாகும்.
கொல்கத்தாவை தவிர்த்து, நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். புனே மெட்ரோவில் ரூபி ஹால் கிளினிக் முதல் ராம்வாதி வரை நீடிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை, கொச்சி மெட்ரோ ரயிலில் எஸ்.என் ஜங்சன் முதல் திரினிபுத்ரா மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான முதல் கட்ட நீடிப்பு பணி, தாஜ் கேட் முதல் மன்கமேஸ்வர் வரையிலான ஆக்ரா மெட்ரோ நீட்டிப்பு உள்ளிட்ட திட்டங்களையும் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மார்ச் 4 முதல் 6 ஆம் தேதி வரை 3 நாட்கள் பயணமாக தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி முன்னதாக பீகாரில் ரயில், சாலை, பெட்ரோ, இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான 12 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க : ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடை - கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!