டெல்லி: டெல்லியில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுள் ஒன்று தெற்காசியப் பல்கலைக்கழகம் (SAU). இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று (பிப்ரவரி 26) புதன்கிழமை மகா சிவராத்திரி அன்று மாணவர்களுக்கு மதியம் உணவாக அசைவம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. அதனால், ஆத்திரமடைந்த அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பினர் உணவுக் கூடத்திலிருந்த பணியாளர்கள், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவி மற்றும் சில மாணவர்களைத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக பிற்பகல் 3.45 மணியளவில் மைதாங்கரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தகவலின்பேரில் காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ABVP) தரப்பில் போலீசாரிடம் வாதிட்டனர். தொடர்ந்து, இதுகுறித்து டெல்லி ஏபிவிபி தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் “மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த உண்ணாவிரதத்தை அவமதிக்கும் வகையில், மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மாணவர் சங்கத்தின் சூழ்ச்சி வேலை” என்ற வாதத்தை முன்வைத்தனர்.
SFI Delhi demands immediate action against ABVP goons who unleashed attack on the students of SAU in the University Mess!#SFI #SAU #shameonabvp pic.twitter.com/dCgtVocDoU
— SFI Delhi (@SfiDelhi) February 26, 2025
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து டெல்லி இந்திய மாணவர் சங்கம் (SFI) அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மகா சிவராத்திரியில் அசைவ உணவு வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை ஏற்காததற்காக அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ABVP) உறுப்பினர்கள் சில மாணவர்களைப் பல்கலைக்கழக உணவு விடுதியில் வைத்துத் தாக்கியுள்ளனர். அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ABVP)உறுப்பினர்கள் பெண்கள் உள்பட மாணவர்களை உடல்ரீதியாகத் தாக்கிய சம்பவம் கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
I'm proud of @ABVPVoice students for not tolerating it... They knew that it would land them in legal trouble and yet did it for Dharma... They stood with the fasting students who were forced to eat nonveg by naxalis..
— Mr Sinha (@MrSinha_) February 26, 2025
Full support to them...!!! 👏🏻 https://t.co/3t5H63N2pn
இதையும் படிங்க: அசாமில் உணரப்பட்ட நிலநடுக்கம்: 5.0 ரிக்டர் அளவு பதிவு!
இந்நிலையில், இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், "பல்கலைக்கழகம் அளித்த தகவலின்பேரில் நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றோம். நாங்கள் செல்லும் போது அங்கு இருதரப்பினர் கடும் வாக்குவாதத்துடன், தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். பின் இருதரப்பையும் அமைதிப்படுத்தி நடந்த பிரச்சினை குறித்துக் கேட்டறிந்தோம்.
தற்போதைய நிலவரப்படி பல்கலைக்கழகம் அமைதியான சூழலை எட்டியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இதுவரை முறையான புகார் எதுவும் வரவில்லை” எனத் தெரிவித்தனர். மேலும் போலீசார் இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம், அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் அமைப்பினர் (ABVP) மற்றும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.