ரேஷன் கடை கதவை உடைக்க முயற்சிக்கும் கரடி! - ரேஷன் கடை கதவை உடைக்க முயற்சிக்கும் கரடி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை சுற்றுப்புறப் பகுதிகளில் சமீபகாலமாகக் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வனப்பகுதி ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் கரடிகள் உலா வருவதால் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடனேயே பணிக்குச் சென்று வருகின்றனர். இப்பகுதியில் உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு, விளை நிலங்களுக்குள் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் உபதலை ஊருக்குள் வந்த கரடி சாலையை கடந்து உணவு தேடி நியாய விலைக் கடையின் கதவை உடைக்க முயற்சித்தது, இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் எடுத்தனர், சிறிது நேரம் முயற்சித்து முடியாததாலும், அருகில் மக்கள் சத்தம் கேட்டதால் அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.