குன்னூர்: குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி - அச்சத்தில் மக்கள் - கரடி புலி சிறுத்தை போன்ற வனவிலங்குகள் உலா வருவது வழக்கம்
நீலகிரி: வனப்பகுதியை சுற்றியுள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள், கரடி, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் உலா வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள அதிகரட்டி, முட்டிநாடு, ஈஸ்வர்நகர், நெடிக்காடு போன்ற பகுதிகளில் ஒற்றை கரடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் கோயில்களின் கதவுகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் மாலையில் வீடு திரும்பும் பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை தேயிலை செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் கரடி பின்தொடர்ந்து விரட்டி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே உயிர்சேதம் ஏற்படும் முன் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.