சேட்டை செய்த டால்பின்கள்: காணொலி எடுத்த மீனவர்கள்
கடல்வாழ் உயிரினங்களில் கருவாகத் திகழும் மன்னார் வளைகுடா பகுதி, தனுஷ்கோடி முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகளை உள்ளடக்கியதாகும். இப்பகுதியில் பவளப் பாறைகள், ஆமைகள், கடல் பசு, டால்பின்கள் என அரியவகையிலான மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக பாலூட்டி வகையைச் சேர்ந்த ஐந்து வகை டால்பின்கள் இப்பகுதியில் வசித்துவருகின்றன. மிகவும் அழியும் தருவாயில் உள்ள இந்த டால்பின்களைப் பிடிக்க ஒன்றிய அரசு தடைவிதித்துள்ளது. இந்தச் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் நாட்டு படகை சுற்றிவளைத்த டால்பின்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்னும் பின்னுமாக நீந்தி, துள்ளிக் குதித்து செய்த சேட்டைகள் படகில் சென்ற மீனவர்களை ஆச்சரியப்படுத்தியது. டால்பின்கள் செய்த சேட்டைகளை மீனவர்கள் தங்கள் செல்போன்களில் காணொலியாகப் பதிவு செய்துள்ளனர்.