முழு ஊரடங்கு எதிரொலி- கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவியும் மக்கள்
தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நாளை (மே. 10) முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 17,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். சென்னையிலிருந்து மட்டும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் இயக்கம் இன்று இரவோடு நிறுத்தப்படுவதால் பயணிகள் பேருந்து நிலையங்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்று காத்திருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் மக்களிடையே கரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.