கடம்பூர் மலைப்பகுதியில் கடும் பனி மூட்டம் - heavysnowfall
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், கடம்பூர் மலைப்பகுதியில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்களது அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாமல் விவசாயிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை பனிமூட்டம் விலகாமல் இருப்பதால் கடம்பூர் மலைப்பகுதியில் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது, மரவள்ளி அறுவடை, மக்காச்சோளம் அறுவடை, விதை விதைத்தல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.