விஜய் அரசியலுக்கு வந்தால் நல்ல விஷயம்தான் - யுவன் ஷங்கர் ராஜா
கடந்த ஜூலை 15ஆம் தேதி மலேசியா கோலாலம்பூரில் 'ஹை ஆன் யுவன்' (High on U1) என்ற இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையம் வந்த யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அவரது ரசிகர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யுவன் சங்கர் ராஜா, "மலேசியாவில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு வரவேற்பு கிடைத்தது. அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மக்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் புதிதாக முயற்சி எடுத்து இந்த இசை நிகழ்ச்சி நடத்தினோம். அதேபோல் இந்த நிகழ்ச்சியை மக்களும் ஏற்றுக் கொண்டு சிறப்பான வரவேற்பை கொடுத்தனர்.
அதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். மேலும், இந்த நிகழ்ச்சியில் சிலம்பரசன் கலந்து கொண்டு பாடல்களை பாடி நடனமாடி நிகழ்ச்சியை சிறப்பாக்கினார். உண்மையிலேயே சிம்பு செம்ம எனர்ஜியுடன் இருந்தார். எங்களுடையை காம்போவில் நிறைய ஹிட் வந்துள்ளது. அவை அனைத்தும் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
பாடல்களை தேர்ந்தெடுத்து பண்ணலாம் என முடிவெடுத்துள்ளேன். அதற்கு வாய்ப்பு இல்லாமல் படங்கள் குறைந்துவிட்டது என்பது காரணம் இல்லை” என்றார். மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்டபோது, “நல்ல ஒரு விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
‘தளபதி 68’ பாடல்கள் இனிமேல்தான் துவங்க உள்ளது. மேலும் மங்காத்தா உள்ளிட்ட படங்கள் போன்ற இசையை தளபதி 68லும் எதிர்பார்க்கலாம்” என கூறினார். மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பதில் உங்கள் தந்தை ஏன் இசையமைக்கவில்லை என்ற கேள்விக்கு, ‘அதை நீங்கள் தயாரிப்பாளரிடம்தான் கேட்க வேண்டும்’ என சிரித்துக் கொண்டே பதில் அளித்துச் சென்றார்.