தமிழ்நாடு

tamil nadu

ஓசியில் போண்டா தராததால் ஆத்திரம்! மூதாட்டியின் மீது சிலிண்டரை தூக்கி வீசிய போதை ஆசாமிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 7:46 AM IST

ஓசியில் போண்டா தராததால் மூதாட்டியின் மீது சிலிண்டரை தூக்கி போட்ட போதை ஆசாமிகள்

சென்னை:மாங்காடு அடுத்த பெரியகொளுத்துவான்சேரி பகுதியை சேர்ந்தவர் ராணி பாய் (வயது 65). இவர் அதே பகுதியில் உள்ள தெருவில் மாலை நேரங்களில் பஜ்ஜி, போண்டா விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (செப். 6) இரவு அங்கு போதையில் வந்த இளைஞர்கள் சிலர் அருகில் இருந்த கடையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதே வேகத்தில் ராணி பாயிடம் ஓசியில் பஜ்ஜி, போண்டா கேட்டதாக கூறப்படுகிறது.  

அவர் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த போதை ஆசாமிகள் அங்கிருந்த பஜ்ஜி, போண்டாக்களை கீழே தள்ளிவிட்டு சிலிண்டரின் வயரை பிடுங்கி அதை தூக்கி ராணிபாய் மீது வீசினர். இதில் மூதாட்டி அலறித் துடித்தார். சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். 

இதில் காயம் அடைந்த ராணி பாய் பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டார். இதுகுறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்ததின் பேரில் மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து, மூதாட்டியின் மீது சிலிண்டரை தூக்கி போட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.

மூதாட்டியின் மீது போதையில் சிலிண்டரை தூக்கி போடும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலும் இந்த பகுதியில் அதிக அளவில் கஞ்சா போதையில் இளைஞர்கள் சுற்றி திரிவதாகவும் இதனால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடப்பதாகவும், இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details