சாம்பார் சாதத்தில் நெளிந்த புழு... வைரலாகும் வீடியோ!! - chennai news
சென்னை ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்த தனுஷ் (23) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், தனுஷ் நேற்று தனது அண்ணன் மற்றும் உறவினர்களுடன் திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் உணவருந்த சென்றுள்ளார்.
அப்போது ஹோட்டலில் ஸ்பெஷல் மீல்ஸ் மற்றும் சாம்பார் சாதம் ஆர்டர் செய்துள்ளனர். இதில் வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தை முதலில் சாப்பிட்டுள்ளனர். இதில் புழு ஒன்று நெளிந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தனுஷ், புழுவை அங்கிருந்த ஊழியர்களிடம் காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து மேலாளரிடம் கேட்டபோது, தவறு நடந்ததை ஒப்பு கொண்டுள்ளார். மேலும், இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்டவர் ஆன்லைன் வாயிலாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் தெரிவிக்க உள்ளதாக கூறி சென்றுள்ளார். முன்னதாக இதே போன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில உணவகங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது.