தமிழகத்திலேயே முதன்முறையாக..ஏசியுடன் கூடிய ஈரடுக்கு பேருந்து நிழற்குடை! - தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி
தருமபுரி:தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் வசதிக்காக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில் குமார் ஏசியுடன் அமைக்கப்பட்ட ஈரடுக்கு நிழற்கூடம் அமைத்துள்ளார். தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு கலைக்கல்லூரியில் இருந்து ஏமக்குட்டியூர் செல்லும் சாலையில் இன்று (ஜூன் 5) இந்த நிழற்கூடத்தை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்திலேயே முதன்முறையாக 15-க்கும் மேற்பட்ட வசதிகளுடன் கூடிய நவீன சோலார் குளிர்சாதன இரண்டு அடுக்கு பேருந்து நிழற்கூடம் ஆகும்.
இந்த நிழற்கூடத்தில் தானியங்கி பண பரிவர்த்தனை செய்யும் ஏடிஎம் இயந்திரம், சிறப்பு அங்காடி, தானியங்கி சூரிய மின் சக்தி நிலையம், 24 மணி நேர கண்காணிப்பு கேமரா, இலவச வைபை (wifi) வசதி, அதிநவீன வர்த்தக விளம்பர எல்இடி பலகை, குளிரூட்டப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறை, மினி நூலகம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை வெளிப்படுத்தும் வகையிலான வாசகங்கள், தருமபுரி பண்பலை வானொலியை கேட்கும் வசதி, ஏசி அறையில் தொலைக்காட்சி பெட்டி, செல்பி பாயிண்ட், செல்போன் மொபைல் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட வசதிகள் இந்தப் பேருந்து நிழற்கூடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.