உலக பழங்குடியினர் தினம்: பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து நடனமாடி மகிழ்ந்த ஊராளி பழங்குடியின மக்கள்! - நடமாடி மகிழ்ந்த ஊராளி பழங்குடியின மக்கள்
ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் ஊராளி பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். உலக பழங்குடியினர் தின விழா, அப்பகுதியில் தொடர்ந்து இரு தினங்களாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இன்று கடம்பூரில் நடைபெற்ற விழாவில் 500க்கும் மேற்பட்ட ஊராளி பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ஊராளி பழங்குடியின மக்கள் தங்களுடைய பாரம்பரிய முறையிலான பாடல்களை மேடையில் பாடி அசத்தினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய இசைக் கருவிகளை வாசித்தபடி, அதற்கு ஏற்ப ஆண்கள் மற்றும் பெண்கள் நடனம் ஆடி மகிழ்ந்தனர். உலக பழங்குடியினர் தின விழாவில் ஊராளி பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடியதை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.
மேலும் பரண் தொண்டு நிறுவனம் சார்பில், ஊராளி பழங்குடியின மக்களின் வாழ்வியல் குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படத்தை வெளியிட்டு, அதன் முன்னோட்டம் விழா மேடையில் ஒளிபரப்பப்பட்டது. அந்த முழுமையான ஆவணப்படம் சென்னை ஜேசுட்ஸ் (Chennai Jesuits) எனப்படும் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.