அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த வாழைக்குளைகளை வெட்டிச் சென்ற மக்கள் - முதலமைச்சர் நிகழ்ச்சியில் நடந்த தள்ளு முள்ளு! - Dharmapuri district news
தருமபுரி:தொப்பூரில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கான பதிவு முகாமின் தொடக்கவிழா இன்று (ஜூலை 24) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு முன் பதிவை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் 1500 நபர்கள் அமரக்குடிய வகையில் பிரம்மாண்டமான இடம் அமைக்கப்பட்டிருந்தது. மேடைக்கு செல்லும் வழியில் இருபுறமும் நூற்றுக்கு மேற்பட்ட வாழை மரங்களை வாழைக்குளைகளுடன் வரவேற்பு பகுதியில் வைத்து அலங்கரித்து இருந்தனர். நுழைவாயிலின் முன் பகுதியில் கரும்பு மற்றும் தென்னை குழைகளை வைத்து அழகு படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் புறப்பட்டுச் சென்ற பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பெண்கள் நுழைவாயிலில் இருந்த வாழைக் குலைகளை எடுத்துச் சென்றனர். இளம் பெண்கள் முதல் 70 வயது முதியோர் வரை வாழைகுலைகளை மரத்திலிருந்து போராடி இழுத்து பறித்துச் சென்றனர் .
இதனை அடுத்து ஆண்கள் சிலர் வீச்சருவாள் கொண்டு வந்து வாழை குலைகளை வெட்டி எடுத்துச் சென்றனர். சுமார் 70 வயது பெண்மணி ஒருவர் ஆவேசமாக ஓடி வந்து இளைஞரிடம் இருந்த வீச்சருவாவை பிடுங்கிச் சென்று தான் பாதுகாத்து வைத்திருந்த நுழைவாயில் முன்பகுதி வாழைகுலையை வெட்டிச் சென்றார்.
இதனால் இப்பகுதி சுமார் அரை மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. வாழைக்குலை, தென்னை குழை மற்றும் கரும்பு கிடைக்க பெறாத பெண்கள் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பூச்செடிகளை எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.