வெள்ளோடு மாரியம்மன் கோயில் திருவிழாவில் பிரமாண்ட வள்ளி கும்மியாட்டம்! - erode district news
Published : Dec 13, 2023, 12:08 PM IST
ஈரோடு:ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம், ஆறுகரை மக்களால் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில், மாரியம்மன் கோயில் கலை மன்றத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆறுகரையைச் சேர்ந்த மங்கையர் குழுவினர் பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களில் ஆடை அணிந்து, 200க்கும் மேற்பட்ட சிறுமியர் மற்றும் பெண்கள் நாட்டுப்புறப் பாடல் பாடியபடி நடமாடினர். இது அங்குள்ள பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதனை பார்ப்பதற்காக சுற்று வட்ட கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் குவிந்தனர்.
இது குறித்து நாட்டுப்புறக் கலை ஆர்வலர்கள் கூறுகையில், “நாட்டுப்புறக் கலைகளில் பழமையான ஒன்றான வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை, கோயில் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பலவற்றில் அரங்கேற்றம் செய்து வருகின்றனர். இந்த கலைக்கு அரசு முக்கியத்துவம் அளித்து, கலைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.