மேடவாக்கம் அருகில் சாலை விபத்தில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அக்கா, தம்பி பலி! - 30 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்
சென்னை: தாம்பரம் அருகே உள்ள சந்தோஷ் புரத்தைச்சேர்ந்தவர், குமரவேல். சென்னை ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் கலைச்செல்வி (26), மகன் சந்தோஷ் குமார் (21). இந்நிலையில் நேற்று மாலை இருவரும் இருசக்கர வாகனத்தில் மேடவாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
மேடவாக்கம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கலைச்செல்வி 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற சந்தோஷ் குமாருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கலைச்செல்வியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சந்தோஷ் குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார். பின்னர் இருவரது சடலங்களையும், உடற்கூராய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநர் ஆலமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் அக்காவும் தம்பியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடுரோட்டில் பெண்ணை தாக்கி காரில் ஏற்றிய கொடூரம் - என்ன நடந்தது?