எனக்கு ராஜாவா நான் வாழுறேன்.. நெடுஞ்சாலையில் சுற்றி திரியும் காட்டு யானைகள்! - national highways
திருப்பத்தூர்:நாட்றம்பள்ளி அருகே 6 பேரை கொன்ற இரண்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்லும் காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான தகரகுப்பம், தண்ணீர்ப் பந்தல், கரடிகுட்டை பகுதியில் இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் குப்பம் மல்லானூர் பகுதியில் உஷா மற்றும் சிவலிங்கம் எதிர்பாராத வகையாக இரண்டு யானைகளிடம் சிக்கி இரண்டு பேரையும் மிதித்துக் கொன்றது.
இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கே அஞ்சுகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான தகரகுப்பம் பகுதியில் நுழைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கோடைக் காலத்தின் தாக்கத்தினால் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்துகின்றனர்.
ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான திம்மம்பேட்டை, தகரகுப்பம், கரடிகுட்டை தண்ணீர்ப் பந்தல் ஆகிய பகுதிகளில் யானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறையினர் மூலமாக அறிவுறுத்தி இருந்தனர்.
இதனை டோரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். சோதனையின் போது இன்று காலை தகரகுப்பம் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் ஆத்தூர் குப்பம் வழியாக தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்லும் காட்சிகளை வனத்துறையினர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்பொழுது குடியிருப்பு பகுதிகளில் இந்த யானைகள் முகாமிட்டுள்ளன. இதனைக் கண்காணித்து வரும் வனத்துறையினர் அதனை வனப் பகுதிக்கு விரட்டி அடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். போதிய வனத்துறையினர் இல்லாத நிலையில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த யானைகள் இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் மூன்று பேரும் கிருஷ்ணகிரியில் ஒருவரும் மல்லானூரில் இரண்டு பேர் என மொத்தம் 6 பேரைக் கொன்று உள்ள நிலையில் அப்பகுதியில் உள்ளது இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மேலும் விரைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் எடுக்குமாறு தமிழக வனத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஈரோட்டில் பலாப்பழம் சாப்பிட கூரையை உடைத்தெறிந்த யானை வீடியோ!