குன்னூரில் முகாமிட்ட காட்டு யானைகள் அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டப்பட்டது! - யானைகள்
நீலகிரி: சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மேட்டுப்பாளையம் அடர்ந்த வனப் பகுதியிலிருந்து உணவு மற்றும் குடிநீர் தேடி யானைகள் குன்னூர் வனப்பகுதிகளுக்கு வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக ஐந்து காட்டு யானைகள் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. மேலும் அங்கு அருகிலிருந்த காய்கறி தோட்டத்திற்கு சென்று அங்கு நடவு செய்யப்பட்டிருந்த காய்களைத் தின்று சேதப்படுத்தின.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள், யானைகளை அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டினர். மேலும் வறட்சி காரணமாக நீர் மற்றும் உணவு தேடி வன விலங்குகள் ஊருக்குள் வர வாய்ப்புள்ளதால், மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும், வாகன ஓட்டிகள் சாலையில் கவனமாகச் செல்லவும் அறிவுறுத்தினர்.
இரண்டு நாள்களாக குன்னூரில் போக்கு காட்டி வந்த ஐந்து யானைகளும் வனத்துறையினர் கூட்டு முயற்சியால் அடர்ந்து காட்டுப் பகுதிக்குச் சென்றதில் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: ஓடி வந்த யானை..குழந்தையை கண்டதும் திரும்பிச் சென்ற நெகிழ்ச்சி!