நீலகிரியில் வீடு புகுந்து தாக்க முயன்ற காட்டு யானை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!
Published : Oct 10, 2023, 1:43 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகள், அவ்வப்போது மனிதர்களையும் தாக்கி வருகிறது. இதனால் மனிதர்களின் உயிரிழப்பு தொடர்ச்சியாக நடைபெறுகிறது. எனவே, யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் இரவு மற்றும் பகல் நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பந்தலூர் தொண்டியாலம் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானை, திடீரென அங்கிருந்த வனத்துறையினரையும், குடியிருப்புவாசிகளையும் ஆக்ரோஷமாக தாக்க துரத்தியது. அதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் குடியிருப்புவாசிகள் அனைவரும் வீட்டிற்குள் ஓடி மறைந்து கொண்டனர். பின்னர், நீண்ட நேரம் போராடி, காட்டு யானையை கூச்சலிட்டு வனத்துறையினர் துரத்தினர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், தேவையின்றி பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.