வால்பாறையில் வலம் வரும் காட்டு யானைகள் கூட்டம்... வீடியோ வைரல்! பொது மக்கள் அச்சம்!
Published : Sep 2, 2023, 1:52 PM IST
கோயம்புத்தூர்:கேரள வனப்பகுதிகளில் இருந்து அதிகப்படியான காட்டு யானைகள் கூட்டம் வால்பாறை முடீஸ் பகுதியில் உள்ள தொழிலாளர் விளையாட்டு மைதானத்தை முற்றுகையிட்டு உள்ள வீடியோ சமூக வலைதலத்தில் வைரலாகி வருகிறது.
வால்பாறையை அடுத்த BBTCக்கு (தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்) சொந்தமான முடீஸ் பகுதியில் தொழிலாளர் விளையாட்டு மைதானம் அமைந்து உள்ளது. இதில் வனத்தை விட்டு வெளியேறிய ஒன்பது யானைகள் கூட்டம் அப்பகுதியில் உள்ள புல்வெளி பரப்பில் நடமாடியது.
மேலும், வால்பாறை பகுதியில் தொடர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களிலும், குடியிருப்பு பகுதியிலும், விளையாட்டு மைதானங்களிலும் வளம் வருகிறது. இப்பகுதியானது மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பக பகுதியாகும்.
இப்பகுதியில், கடந்த ஒரு வார காலமாக, அடர்ந்த சோலை குடியிருப்புப் பகுதிகளில் முகாம் இருந்த யானையானது தற்போது விளையாட்டு மைதானத்தையும் விட்டு வைக்காமல் அப்பகுதிக்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதியில் இருக்கக்கூடிய தாயமுடி, கெஜமுடி, தோணிமுடி, 3 வது பிரிவு செல்லும் பொதுமக்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குடியிருப்பு மற்றும் பிரதான சாலைகளைப் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.