நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானை..வைரல் வீடியோ! - குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் யானை
Published : Aug 28, 2023, 5:28 PM IST
நீலகிரி:நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். இவ்வனங்களில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட பல வனவிலங்குகளும் அரிய வகை தாவர இனங்களும் உள்ளன. மேலும் வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீரை தேடி சில நேரங்களில் குடியிருப்பு பகுதியில் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.
இது பொதுமக்களை அச்சம் அடைய செய்கின்றது. மேலும் தற்போது குன்னூர் அடுத்த பர்லியார் (Burliyar) பகுதிகளில் பலாப்பழ சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதனால் யானைகளின் கூட்டம் சமவெளி பகுதியில் இருந்து, குன்னூர் வனப்பகுதியான பர்லியார் பகுதியில் படை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் யானை கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றைக் காட்டு யானை கடந்த ஒரு மாத காலமாக அப்பகுதியில் சுற்றி வருகிறது. மேலும் ஒற்றை யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் இடையேயான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று அந்த ஒற்றை யானை உலா வந்ததுள்ளது.
இதனை கண்ட வனத்துறையினர், ஒற்றைக் காட்டு யானை சாலையை கடந்து செல்ல இருபுறமும் வாகனங்களை நிறுத்தி யானை செல்வதற்காக வழிவகை செய்தனர். மேலும் இங்கு சுற்றி திரியும் ஒற்றைக் காட்டு யானையை விரைவில் அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குன்னூர் வனச்சரகர் தெரிவித்துள்ளார்.
மேலும் சாலை பகுதிகளில் காட்டு யானை போன்ற வன விலங்குகளை கண்டவுடன் அருகே சென்று செல்போன் மூலம் செல்பி எடுக்க வேண்டாம் என்றும், வாகனங்களில் அதிக ஒலி எழுப்ப வேண்டாம் எனவும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.