நெசவுத் தொழிலாளர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை - கிராம சபை கூட்டத்தில் புகார்! - மாக்கிணாங்கோம்பை ஊராட்சி
Published : Oct 3, 2023, 8:06 AM IST
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மாக்கிணாங்கோம்பை ஊராட்சி கிராமசபை கூட்டமானது ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கேசிபி இளங்கோ, ஊராட்சித் தலைவர் அம்மு என்கிற ஈஸ்வரன் தலைமையில் நேற்று (அக்.2) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாக்கிணாங்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த கிராமசபை கூட்டத்தில் சாலை வசதி, ஆடு, மாடு, கோழி, சந்தைக்கு இடம் ஒதுக்கீடு, அங்கன்வாடி மையk கட்டிடம் கட்டுதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த கூட்டத்தில் அரசூரில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட நெசவுத் தொழிலாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்றும், அதிகமான வருமானம் என காட்டுவதாகவும் நெசவுத்தொழிலை நம்பி வாழும் எங்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.
மேலும், வசதி படைத்தவர்கள், கார் வைத்திருக்கும் நபர்கள், சொந்தமாக வீடு உள்ளவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டினர். ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்ததால் கிராமசபை கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததும், பெண்கள் கலைந்து சென்றனர்.