Weavers Protest: பொள்ளாச்சியில் நெசவாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்! நூலின் ஜிஎஸ்டி வரியை குறைக்க கோரிக்கை - Pollachi
கோயம்புத்தூர்:தேசிய கைத்தறி தினம் இன்று (ஆகஸ்ட் 7) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், காளியப்பா கவுண்டன்புதூர், பகவதிபாளையம், சேரிபாளையம், குள்ளக்காபாளையம், போத்தனூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் மூன்று தலைமுறைக்கு மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் கைத்தறி தொழில் செய்து வருகின்றனர்.
இதையடுத்து பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தில் நெசவாளர்கள் குடும்பத்துடன் இன்று (ஆகஸ்ட் 7) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைத்தறி நெசவுக்கு ஜிஎஸ்டி வரி மத்திய அரசு விதித்ததால் கைத்தறி தொழில் செய்ய முடியவில்லை எனவும் மேலும் நூல் விலை ஏற்றத்தால் நெசவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறுகின்றனர்.
தமிழகத்தில் ஆளும் ஆட்சியாளர்கள் நெசவு செய்யும் தொழிலாளர்கள் நலன் கருதி நெசவுத் தொழில் மேம்பட வழி வகுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு நெசவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி கூட்டுறவு சங்கத்தின் மூலம் நெசவுத் தொழில் வளம் பெற வழி வகுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி, நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.