vishwakarma scheme: குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம் - கி.வீரமணி - மதுரை மாவட்ட செய்தி
மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "மதுரைக்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் பெருமைக்கு பெருமை சேர்க்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது. உலகிலேயே நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்ட நூலகமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் திகழ்கிறது.
அறிவு, அறிவியல், பகுத்தறிவு, திராவிட இயக்க வரலாறு, தமிழ் மொழியின் சிறப்புகள் கொண்ட கலைஞரின் பெயரால் நூலகம் அமைந்துள்ளது சிறப்பாகும். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இளம் தலைமுறையினர் தங்களது அறிவினை கூர்மைப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
அறிவின் கடலாகத் திகழும் கலைஞர் நூலகம் தனி உலகமாக பார்க்கப்படுகிறது. கலைஞர் நூலகத்தை பார்வையிட்ட இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இடிதாங்கியை வைத்து கட்டிடங்களை பாதுகாப்பது போல அரசியல் இடிதாங்கிகளிடம் இருந்து கலைஞர் நூலகத்தை பாதுகாக்க மக்கள் முன் வருவார்கள். விஸ்வகர்மா திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு, குலக் கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதில் 18 தொழிலை கண்டறிந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மிக பெரிய ஆபத்தான திட்டம் இதை வன்மையாக கண்டிக்கிறோம். மீண்டும் ஜாதி உணர்ச்சியை உருவாக்க முயற்சி நடக்கிறது.
குலத் தொழிலை அறிமுகப்படுத்த முயற்சி நடக்கிறது. இதை எதிர்த்து ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும், ஆகவே தான் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இது சமுக நீதிக்கு தடையான திட்டம், ஒரு போதும் தமிழ்நாடு இந்த திட்டத்தை ஒப்புக் கொள்ளாது. மீண்டும் சாதி வர்ணாசிரமத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது" என கூறினார்