அம்பத்தூரில் வெள்ளம் சூழ்ந்த தொழிற்சாலைகள்.. மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்த தொழிலாளர்கள்! - சென்னையில் புயல் தாக்கம்
Published : Dec 8, 2023, 9:35 AM IST
சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தினால், சென்னை மாநகரம் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக இருந்தது. ஒரு சில இடங்களில் தண்ணீர் வடிந்திருந்தாலும், இன்னும் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அந்த வகையில், கனமழை காரணமாக சென்னை அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வெள்ள நீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது. இதனால் அந்த தொழிற்சாலையில் தங்கி வேலை பார்ப்பவர்கள், தங்குவதற்கு இடமின்றி தொழிற்சாலை மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும், தொழிற்சாலையின் வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி தரப்பில் இருந்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த தொழிலாளிகள், தாங்களே வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்த தொழிற்சாலையில் பல லட்சம் மதிப்புடைய உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், இதுவரை எந்த அதிகாரிகளும் வந்து ஆய்வு மேற்கொள்ள வரவில்லை எனவும், தொழிலாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.