கனமழை எதிரொலி; பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம்! - ஈரோடு
Published : Nov 8, 2023, 9:52 AM IST
ஈரோடு: தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் பவானி ஆற்றிலும், மாயாற்றிலும் நீர்வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால், அணையின் நீர்மட்டம் தற்போது 65.14 அடியாக சரிந்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் 105 அடியாகவும், நீர் இருப்பு 32.8 டிஎம்சியாக உள்ளது.
அணையில் கீழ் பவானிவாய்க்காலுக்கு தினந்தோறும் 2,300 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட, நீர் வெளியேற்றம் கூடுதலாக இருந்ததாலும், சில நாட்களாக சத்தியமங்கலம், கோபி நெல் சாகுபடி பகுதியில் மழை பொழிவதால் கீழ்பவானி வாய்க்கால் நீர் வெளியேற்றம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
தற்போது பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இரு நாட்களாக மழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்து 6,574 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.41 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 6,574 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 10.30 டிஎம்சி மற்றும் நீர் வெளியேற்றம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.