பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!
Published : Jan 7, 2024, 1:48 PM IST
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி பிரதான வாய்க்காலில், இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்காக இன்று (ஜன.7) தண்ணீர் திறக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட ஆயக்கட்டு நிலங்களுக்கு, இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று பவானிசாகர் அணையிலிருந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில், கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. முதலில் 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து 2 ஆயிரத்து 300 கன அடியாக திறந்துவிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பவானிசாகர் அணை நீர் திறப்பு மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இன்று முதல் மே 1ஆம் தேதி வரை 67 நாள்களுக்கு திறப்பு, நிறுத்தம் முறையில் கடலை, சோளம் மற்றும் எள் சாகுபடி செய்ய 11 ஆயிரத்து 500 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த இரண்டாம் போக தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 82.81 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 934 கன அடியாகவும், அணையில் இருந்து பவானி ஆற்றிற்கு 800 கனஅடி நீர், கீழ்பவானி வாய்க்காலில் 500 கனஅடி நீர் என மொத்தம் ஆயிரத்து 300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்இருப்பு 17.22 டிஎம்சி ஆக உள்ளது.