வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி! - vaigai Dam in theni
Published : Oct 28, 2023, 2:23 PM IST
தேனி:ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், அணைகள் உள்ளிட்டவைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்தும், மூல வைகை ஆற்றுப் பகுதியில் இருந்து வைகை அணைக்கு வரும் நீர்வரத்தும் கூடுதலாக வரத் தொடங்கியதால், வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 62.89 அடியாக உயர்ந்துள்ளது.
வைகை அணையின் முழு கொள்ளளவான 71 அடியில் அணையின் நீர்மட்டம் தற்போது 62.89 அடியாக இருக்கின்றது. இது தேனி மட்டுமல்லாது மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும், அணையில் நீர் இருப்பு 4,180 கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 1,370 கன அடியாகவும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 69 கன அடியாகவும் உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் 4 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இது போன்று தேனி மாவட்டத்தில் மழை தொடர்ந்தால், அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து, விவசாயத் தேவைகளுக்கான நீர் தங்கு தடை இன்றி கிடைக்கும் சூழல் ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.