ஈரோட்டில் கனமழை; கொடிவேரி அணையின் நீர்வரத்து அதிகரிப்பு - குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை! - erode rain
Published : Nov 8, 2023, 12:03 PM IST
ஈரோடு: தமிழ்நாட்டில் பருவமழை தாமதமாக பெய்து வரும் நிலையில், தற்போது பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஈரோட்டிலும் பரவலாக கனமழையானது பெய்து வருகிறது. மேலும், ஈரோட்டில் பல கிராமங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றானது, கொடிவேரி அணை. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மற்றும் கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் அணைக்கு வரும் உபரிநீர், பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது வரை கொடிவேரி அணைக்கு வரும் நீர்வரத்தானது 1,651 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் கொடிவேரி அணை வழியாக சுமார் 1,654 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கொடிவேரி அணை வழியாக அதிக அளவு உபரி நீர் வெளியேறி வருவதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணைகட்டுக்கு வரவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும், கரையோரம் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.