விக்கிரமசிங்கபுரம்: மின் விளக்குகள் எரியாததால் நகராட்சி கவுன்சிலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி எதிர்ப்பு
Published : Oct 31, 2023, 11:00 PM IST
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகேயுள்ள விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சிக்கு உட்பட்ட 1, 14, 21 ஆகிய 3 வார்டுகளில் அதிமுகவை சேர்ந்த கிராஸ் இமாக்குலேட், வைகுண்ட லெட்சுமி, பாஸ்கர் ஆகியோர் கவுன்சிலர்களாக உள்ளனர். இந்த வார்டுகளில் மின்விளக்குகள் சரிவர ஒளிராமல் பல மாதங்களாக உள்ளன.
இதனை சரி செய்யக்கோரி அப்பகுதி கவுன்சிலர்கள் தொடர்ந்து மனு அளித்து உள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், தேவையில்லாத வீண் பணிகளை மேற்கொள்ளுவதாகவும் அப்பகுதி கவுன்சிலர்கள் குற்றச்சாட்டினர் வருகின்றனர்.
இந்நிலையில், தொடர்ந்து நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சியைக் கண்டித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு இன்று (அக்.31) நடைபெற்ற நகராட்சி மாதாந்திர கூட்டத்தில் பங்கேற்று அவர்களது எதிரப்பை தெரிவித்தனர். தொடர்ந்து நகராட்சி ஆணையரிடம் இது தொடர்பான மனுவையும் அளித்தனர்.
இதுகுறித்து அதிமுக கவுன்சிலர் கிராஸ் இமாக்குலேட் கூறுகையில்; "பல மாதங்களாக 1, 14, 21 ஆகிய வார்டுகளில் தெருவிளக்குகள் பழுதாகி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இருளிலிருந்து வருகின்றனர். அதேபோல், சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளது. இது தொடர்பாகப் பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்குத் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், இரவு நேரங்களில் கரடி நடமாட்டம் அதிகமாக இருக்கும். சரியான தெருவிளக்குகள் இல்லாததால் மக்கள் வெளியே வரமுடியாமல் அச்சத்தில் உள்ளனர். அதனால், உடனடியாக இப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.